சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று மேலும் உறுதியானது. இதனை அதிமுகவின் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து, அதிமுகவின் ஒற்றை தலைமை யாருக்கு? என்ற போட்டியிலும் அதற்கான சட்டப் போராட்டத்திலும் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த நிலையில், இவ்விருவருக்குமான சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்ததா? ஓபிஎஸின் அரசியல் பயணம் உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
சென்னை வானகரத்தில் கடந்த 2022 ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், 2019 உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் ஜூலை 11ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு: உயர்நீதிமன்ற அனுமதியுடன் ஜூலை 11 நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். ஒற்றைத்தலைமையை உறுப்பினர்கள் விரும்புவதால் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு அறிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்புகளை எதிர்த்தும், தன்னை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கிய தீர்மானங்களை எதிர்த்தும், ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்சி உறுப்பினர்களின் எண்ணத்தை பிரிதிபலிக்கும் வகையில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை நிராகரிக்க முடியாது என அவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், உரிமையியல் வழக்கு தொடர அனுமதியும் வழங்கியது.
உரிமையியல் வழக்கு: இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்து, பொதுச் செயலாளர் தேர்தலில் தன்னை போட்டியிட அனுமதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு: முதலில் உயர்நீதிமன்றம் பின்னர் உச்சநீதிமன்றம் என தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சட்ட போராட்டம், மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தது. அதில், பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்வு என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்களை நீக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது சரியா? என விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: அதனால், அதிமுக வழக்கு மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (ஆக.25) தீர்ப்பளித்த நீதிமன்றம், பொதுக்குழுவின் முடிவுக்கு எதிராக தீர்ப்பளித்தால் அது கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கும் என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புதான் இறுதியானதா? ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சட்டரீதியான வாய்ப்பு உள்ளதா? என வழக்கறிஞர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என்பதை விரிவாகப் பார்க்கலாம்..
இது தொடர்பாக பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பழனிசாமி தரப்பு வழக்கறிஞருமான இன்பதுரை, 'சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும், கட்சி விதி 5 படி பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்பதையும், விதி 19-ன் படி யாரையும் கட்சியில் இருந்து நீக்கவோ? சேர்க்கவோ? தனியாக முடிவு எடுக்கவோ? பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுக்குழுவுக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்' தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் சட்டப்போராட்டத்துக்கு முடிவு: இது குறித்து பேசிய சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், 'உச்சநீதிமன்ற உத்தரவின் படி பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் நீக்கத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால். ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டரீதியான போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
ஓபிஎஸுக்கு வேறு கட்சிகளை அணுகலாம்: இனி நீதிமன்றங்களின் மூலம் அதிமுகவை எதிர்த்து எந்த வழக்கும் தொடர முடியாது. உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கத்தை உறுதி செய்ததன் மூலம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என இனி தன்னை அழைப்பது சட்டப்படி தவறாகும். இனி தொடர்ந்து பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கையும் அவர்மீது எடுக்கப்படலாம் என தெரிவித்தார். இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வம் வேறு கட்சிகளை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
மறைந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 2001-ல் டான்சி வழக்கில் சிறைக்கு சென்ற போதும், சொத்து குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு சிறைக்கு சென்ற போதும், ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்ற கூற்றுக்கு ஏற்ப, தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலத்தை வருங்காலங்கள் தான் இனி தீர்மானிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: எட்டப்பர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்