2017ஆம் ஆண்டு திண்டிவனத்திலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்த யுவஸ்ரீ மீது பள்ளி வாகனம் ஏறி பலியானார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரியும் சிறுமியின் தாய் அஞ்சலிதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்புக் குழு அமைக்காமல் கடமை தவறிய தனியார் எஸ்.கே.டி.மழலையர் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை நான்கு மாதங்களில் மனுதாரருக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தொடக்கப் பள்ளிகளின் இணை இயக்குநர் அளித்த அறிக்கையில், பள்ளிகளில் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூ.25 லட்ச ரூபாய் இழப்பீடு கோரிக்கை மீது மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் தான் முடிவு செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.