சென்னை, தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் புதிதாக 3 ஆயிரத்து 500 வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு உள்ளது. தேர்தல் பரப்புரை வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் குறை கேட்பதாக மு.க.ஸ்டாலின், செயலி மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார்.
மக்கள் குறைகளை அவர் கேட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். முதலில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும். அப்படி ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் எப்படி குறைகளைத் தீர்க்க முடியும். எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதை அறிந்தே இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது.
மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை படிக்கக்கூடமாட்டார்கள். ஆனால், பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்" எனக்கூறினார்.
இதையும் படிங்க: தமிழ், சமஸ்கிருதம் என ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் - அமைச்சர் பாண்டியராஜன்