சென்னை: இந்திய வேளாண் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 98 வயதாகும் எம்.எஸ்.சுவாமிநாதன், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்து முதுநிலை பட்டம் பெற்றவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் படிப்பை முடித்த அவருக்கு அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலையில் வேலை கிடைத்தது. ஆனாலும் 1954-ல் இந்தியா திரும்பி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள வேளாண் துறையில் பணியில் சேர்ந்தார். இந்தியாவில் கோதுமை புரட்சி, நெல் விளைச்சலில் தன்னிறைவு உள்ளிட்ட வேளாண் சாதனைகளுக்கு சொந்தக்காரார் எம்.எஸ்.சுவாமிநாதன்.
கடந்த 2020-ஆம் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக விவசாயிகளின் வருமானத்தை இரடிப்பாக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நாம் உள்ளீட்டுப் பொருள்களின் விலை, உற்பத்தி விலை, வரிக்கொள்கைகள், சந்தைப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும், மியான்மரில் நெல் பயிரின் அனைத்து பாகங்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு, நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் கோதுமை உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் செய்ய முடியும். நாம் தற்போது நமது உற்பத்தியில் 40- 50 விழுக்காடு வரைதான் பயன்படுத்துகிறோம். விவசாய உற்பத்தி பொருள்களில் மதிப்புக்கூட்டுச் சேவைகள் வழங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, அதனைப் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
விவசாயிகளுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொழில் வேளாண்மை. இது மற்ற தனியார் துறைகள் போல் இல்லை. நிலம் தனித்தனி விவசாயிகளிடம் உள்ளது. என்ன பயிரை விளைவிக்க வேண்டும், எதனை விளைவிக்கக் கூடாது என அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இதனால் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதோடு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்ய வேண்டும் குறிப்பாக பருவமழை, சந்தைப்படுத்துதல், மேலாண்மை ஆகிய மூன்றுமே விவசாயத்தின் மூன்று தூண்கள். இதனை நாம் சரியாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ஐபிஎஸ் தேர்வில் வெற்றி முதல் வேளாண் புரட்சியின் தந்தை வரை.. எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!