தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவும், மே.23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10ஆம் தேதி அறிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட தினமான மார்ச் 10ஆம் தேதியில் இருந்து தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், இதனால் அனுமதி பெறாமல் பணம், தங்கம் மற்றும் பொருட்கள் எடுத்துச் சென்றால் சட்டப்படி குற்றம் என்றும், அவைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மார்ச் 19ஆம் தேதி வேட்புமனுவும், மார்ச் 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், வேட்புமனு பரீசிலனை 27ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற 29ஆம் தேதியும் நடைபெற்றது.
வேட்புமனுக்கள் விவரம்
மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மொத்தம் 845 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் 65 பெண் வேட்பாளர்களும், 559 சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு மாற்று பாலினத்தை சேர்ந்தவரும் அடங்குவர்.
சோதனையில் மீட்கப்பட்ட பணம்
மக்களவைக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ. 950 கோடி மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் ரத்தான தொகுதி
வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வீட்டில் இருந்து ரூ. 11 கோடியே 48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொகுதியில் அதிகளவு பணம் கைப்பற்றப்பட்டதால், தேர்தலை ரத்து செய்ய மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
பதிவான வாக்கு விவரம்
ஏப்ரல் 18ஆம் தேதி வேலூர் தவிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 71.87 விழுக்காடு வாக்குகள் பதிவானது.
மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை
வாக்குப்பதிவின் போது மாநிலத்தில் உள்ள 40 வாக்குச்சாவடிகளில் சரிவர வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்றும் இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதை ஏற்ற தலைமை தேர்தல் ஆணையம், 40 வாக்குச்சாவடிகளில் 13 வாக்குச்சாவடிகளுக்கும் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.
வாக்குச்சாவடி விவரம்
இதில் தருமபுரி மக்களவைத் தொகுதியில்-8, தேனியில்-2, கடலூரில்-1, திருவள்ளூரில்-1, ஈரோட்டில்-1 ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுகள் நடைபெற்றன.
இப்படி கடந்த மார்ச் 10ஆம் தேதியில் இருந்து இன்று (மே.19) தேதி வரை மாநிலத்தை தொற்றிக் கொண்டிருந்த தேர்தல் ஜூரம் தற்போது ஒரளவிற்கு குறைந்துள்ளது.