கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் உதயகுமார், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 12 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போது வரை கரோனா வைரஸ் தொடர்பாக வீட்டு கண்காணிப்பில் 92,816 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 12 அரசு ஆய்வகங்களும், ஏழு தனியார் ஆய்வகங்களும் என மொத்தம் 19 ஆய்வகங்கள் உள்ளன.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் காய்கறி, பழங்கள் பல பகுதிகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகள் என மொத்தம் 111 குளிர்சாதன கிடங்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு வாடகை வசூலிக்கப்படாது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மூன்றாம் நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது. அதனைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
மேலும் நோயின் தன்மையை ஆராய்ந்தே ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும், கரோனா நோய் தடுப்பு பிரிவில் களப்பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், காவல் துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் எதிர்பாராத விதத்தில் இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கேள்விக்குறியில் ஆட்டோ ஒட்டுநர்களின் வாழ்வாதாரம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?