சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக வயதானவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும், கணிணிப் பயிற்சி முடித்தவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ' உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில், எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர்கள் வரை, திட்டமிட்டு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்றமுறை உள்ளாட்சி அமைப்புகளில் உரிய ஒதுக்கீட்டைச் செய்யாமல் தேர்தலை அறிவித்தார்கள். அதனால், முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் வழக்கு தொடுத்தோம்.
ஆனால், திமுகதான் தேர்தலை நடத்தவிடாமல் செய்கிறது என ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை அதிமுக, ஆட்சியில் இருக்கும் வரை நடத்த மாட்டார்கள். ஏனென்றால், தோல்வி பயம். அதனால்தான் திட்டமிட்டு மாவட்டங்களை இப்போது பிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலிருந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகளைப் பெறக்கூடிய ஊராட்சித் தலைவர்கள், ஐந்தாயிரம் வாக்குகளைப் பெறக்கூடிய ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியத் தலைவர்கள் என எந்த வகையில் பிரித்து, தேர்தலை நடத்தப் போகிறார்கள் என ஒரு சந்தேகத்தைத்தான் நாங்கள் கேட்டுள்ளோம்.
தேர்தலை நிறுத்தச் சொல்லி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு, உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக அரசு முயல்கிறதோ என சந்தேகம் எழுகிறது’ எனக் கூறினார்.
ஐஐடி தொடர் தற்கொலைகள் குறித்த கேள்விக்கு, ' ஐஐடி மாணவி தற்கொலை விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். அங்கு தற்கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' எனவும் மு.க. ஸ்டாலின் கூறினார். இந்நிகழ்ச்சியின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவை பிராண்டுவதிலேயே குறியாக இருக்கும் ஸ்டாலின் - செல்லூர் ராஜு கலாய்