சென்னை: முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் முதியோர்களுக்கான எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மனித உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உறுதிமொழியை வாசிக்க மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், 'முதியோர்களைக் காக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதியோர்களுக்கான தனிக் கொள்கை வடிவமைக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
இதனால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்கள் என்பது அரசின் நோக்கமாக இருந்தாலும், தனியாக இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதால் முதியோர் இல்லங்களைத்தேடி வருகின்றனர். இவர்களுக்காக அரசின் சார்பில் தனியாக முதியோர் இல்லம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
விரைவில் மாணவியருக்கு ரூ.1000 உதவித்தொகை: ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார். உயர்கல்வி பயிலும் மாணவியருக்கான உதவித்தொகை மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்களை மாணவிகள் பள்ளியிலிருந்து பெற்றுத்தர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. மாணவிகளுக்கு விரைவில் சீருடை வழங்கப்படும்.
18 வயதைக் கடக்கும் முன்னர் சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது. குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் குழந்தைத் திருமணம் செய்து கொள்ளும் நிலைமை மாறி அதற்கான எண்ணிக்கையும் குறையும் எனத்தெரிவித்தார்.
சத்துணவு பணியாளர் நியமனம் முறைப்படி வெளிப்படைத்தன்மையுடன் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றது போல் நடைபெறும். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் போன்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்படும். அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி நடத்துவது குறித்து தெளிவான விளக்கத்தை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படவில்லை. அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் சீருடை மட்டுமே வழங்கப்பட்டது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்கப்பசை பறிமுதல் - 2 பெண்கள் கைது