சென்னை: மனித உடலில் கல்லீரலின் செயல்பாடு என்பது மிகவும் இன்றியமையாதது. உடலின் செயல்பாடுகள் என்பது கல்லீரலின் செயல்பாட்டினை பொறுத்தே அமைகிறது. நாம் உண்ணும் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றினை செரிமானம் செய்யும் ஒரே இடம் கல்லீரல். கல்லீரலில் ஏற்படும் பாதிப்பை அதுவே மீண்டும் சரி செய்து கொள்ளும் திறனை பெற்றுள்ளது.
கல்லீரல் அழற்சி: தற்பொழுது உள்ள வாழ்கை முறை மாற்றம், உணவு முறையில் மாற்றம் ஆகியவற்றினால் கல்லீரலில் பாதிப்பும் ஏற்படுகிறது. சமீப காலங்களில் அதிகளவில் மதுப்பழக்கம் உள்ளவர்களிடையே, கல்லீரல் அழற்சி நோய்யின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், கல்லீரலில் ஏற்படும் கொழுப்பின் காரணமாகவும் அழற்சி ஏற்படுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் சிறப்பு சிகிச்சை: தமிழ்நாடு சுகாதாரத்துறை தரப்பில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்க, தனியாக சிகிச்சை கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் அழற்சி நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த 2021 முதல் தான் இதற்கென தனி சிகிச்சை கட்டிடம் கட்டப்பட்டு, பிரத்யோகமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தினமும் கிட்டத்தட்ட 150 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். அவர்களில் உள் நோயாளிகளுக்கென 90 படுக்கைகளுடன் கூடிய வசதிகள் உள்ளன. மேலும், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ரேலா மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு, கல்லீரல் கிடைத்தவுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து காண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
5 பேருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: இது குறித்து சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, “தமிழ்நாடு அரசு, ரேலா மருத்துமனையுடன் இணைந்து புரிந்துணர்வு போடப்பட்டது. அதன் மூலம் ரேலா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் இணைந்து சென்னை மருத்துவக்கல்லூரியின் கல்லீரல் சிகிச்சை மையத்தில் 5 பேருக்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தனியார் மருத்துவமனையில் 40 லட்சம் வரையில் செலவாகும். ஆனால் இங்கு முழுவது இலவசமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவர்களும் பயிற்சி பெற்று வருவதால் வரும் காலங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது அதிகரிக்கும். அதற்கான நவீன வசதிகளுடன் கூடிய அறுவை அரங்கும் உள்ளது.
அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கும் தேவையான மருந்துகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் பராமரிக்கும் பணியையும் செய்து வருகிறோம். கல்லீரல் துறையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் ஹெபடைட்டிஸ் பி மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹெபடைட்டிஸ் பி, சி -க்கு தடுப்பூசி: கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மது அருந்துவதால் நாளடைவில் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. ஹெபடைட்டிஸ் பி, சி போன்றவற்றால் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். மது அடிமை மையங்களில் இருந்து கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றனர்.
உறுப்பு தானம் அவசியம்: பதிவு அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாக கல்லீரல் பெறப்பட்டு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பேர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2500 பேர் இருதயப் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். உடல் உறுப்பு தானம் அளிப்பது தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமாவதற்கு முக்கிய காரணமாகும்” என தெரிவித்தார்.
கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் மற்றும் அரசு மருத்துவமனை கல்லீரல் துறை இயக்குநர் பிரேம்குமார் கூறும்போது, “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்கு தரமான சிகிச்சை வழங்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையை தாண்டி தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 4 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
32 வகையான பரிசோதனைகள்: இணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு, அங்கு 6 படுக்கைகள் உள்ளன. ஒரு அறுவை சிகிச்சை செய்வதற்கு 2 முதல் 3 வாரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக 32 வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு 15 துறை மருத்துவர்கள் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு தான் ஒரு அறுவை சிகிச்சை என்பது இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள்:
- குழந்தைகளுக்கு கல்லீரல் பாதிப்பு மரபணு மூலமாக வருகிறது.
- பெரியவர்களுக்கு உடல் பருமன் காரணமாக, கல்லீரலில் கொழுப்பு சேர்கிறது. அந்த கொழுப்பு ஒரு நிலையில் கல்லீரலில் அழற்சியை ஏற்படுத்தும்.
- அதிகளவில் மது குடிப்பது. குறிப்பாக 10 ஆண்டுகள் தொடர்ந்து குடிப்பதாலும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.
- உணவு முறை மாற்றம்
- அதிகளவில் ஜங்க்பூட் எடுத்துக் கொள்வது
- அதிகளவில் எண்ணெய் உள்ள பொருட்களை உண்பது
- உப்பு அதிகளவில் எடுத்துக் கொள்வது
- உடற்பயிற்சி செய்யாமை.
- வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.
வெளியில் இருந்து உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்படும் என கூற முடியாது. ஆனால் மக்கள் அதிகளவில் கலோரி உள்ள உணவை சாப்பிட்டு விட்டப் பின்னர் உடற்பயிற்சி செய்யாமல் உள்ளனர். அது மாதிரி இல்லாமல் தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
கல்லீரல் பாதிப்பிற்கான சிகிச்சை: சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் விஷம் அருந்தி வருபவர்களுக்காக தனியாக ஒரு பிரிவு செயல்படுகிறது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக எலி பேஸ்ட், எல்லோ பாஸ்பரஸ் சாப்பிட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் சாப்பிட்ட 4 நாட்கள் எந்த அறிகுறியும் தெரியாது. 4 வது நாட்களுக்கு மேல் மஞ்சள் காமாலை, ரத்தம் உறையும் தன்மை குறைவது போன்ற கல்லீரல் பாதிப்பிற்கான அறிகுறிகள் எல்லாம் தெரியும்.
அதற்கு பின்னர் கல்லீரல் பாதிப்பை குறைக்கும் மருந்து காெடுப்போம். அதில் அவர்கள் குணமாகவில்லை என்றால் பிளாஸ்மா மாற்றம் செய்வோம். அதன் பின்னரும் குறையவில்லை என்றால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழியாக இருக்கும். கல்லீரல் மாற்றினால் தான் காப்பாற்ற முடியும். கல்லீரல் பாதிக்கப்பட்டு தினமும் 150 பேர் வருகின்றனர். அதில் உடல் பருமன் பாதிப்பாலும், மது பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம்.
ஹெபடைட்டிஸ் சி: ஹெபடைட்டிஸ் பி ஆல் பாதிக்கப்பட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஹெபடைட்டிஸ் சி பாதிக்கப்பட்டால் கல்லீரல் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். சில முறைகளில் குணப்படுத்தலாம். இந்த வைரஸ், ரத்தத்தின் மூலமாக பரவக்கூடியதாகும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு போடப்பட்ட ஊசியை வேறு நபருக்கு போடுவதாலும், பச்சை குத்திக் கொள்வதற்கு பயன்படுத்தும் ஊசியின் மூலமாகவும் பரவுகிறது.
முன்பு ரத்தம் செலுத்தும் முறையில் வந்தது. தற்பொழுது ரத்தம் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டு, செலுத்தப்படுவதால் அதன் மூலம் பரவுவது குறைந்துள்ளது.
குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் பி: ஹெபடைட்டிஸ் பி வைரஸ் கருவுற்ற தாய்மார் இருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அரசு கருவுற்ற தாய்மார்களுக்கு முதலில் ரத்தம் பரிசோதனை செய்யும். அப்போதே ஹெபடைட்டிஸ் பி வைரஸ் இருக்கிறதா? என்பதையும் பரிசோதனை செய்கின்றனர். அவ்வாறு இருக்கும் தாய்மார்களை கல்லீரல் பிரிவிற்கு பரிந்துரை செய்கின்றனர். அவர்களுக்கு பரிசோதனை செய்து 7 மாதம் முடிந்தப் பின்னர் மாத்திரைகள் கொடுத்து, அதில் கட்டுப்படுத்தி விடுகிறோம்.
மேலும் குழந்தைகள் பிறந்த பின்னர் ஹெபடைட்டிஸ் பி மோகுளோபின், ஹெபடைட்டிஸ் பி என 2 வகையான தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதன் மூலம் 99 சதவீதம் குழந்தைகளுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஹெபடைட்டிஸ் பி பரவுவதைக் குறைத்து, 2030க்குள் ஒழிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.
உடல் பருமன் காரணமாக கல்லீரலில் ஏற்படும் கொழுப்பின் காரணமாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த காலங்களை விட தற்பொழுது கல்லீரலில் கொழுப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் உடல் எடையை தங்களின் உயரத்திற்கு ஏற்ப பராமரிக்க வேண்டும்.
நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்து பின்னர் அதிகளவில் சாப்பிடுவதாலும் பாதிப்பு ஏற்படும். மேலும் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்து விட்டு, உடற்பயிற்சிகள் மேற்காெள்ளாமல் இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்கா போறீங்களா!... அப்போ இத படிங்க முதல்ல..!