சென்னை: இது குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தி மலர் கூறும் பொழுது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 40 ஆண்டுகளில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை ,இரைப்பை, குடல், கல்லீரல் ,கணையம் மற்றும் பிற நோய்களுக்கான அதிநவீன நுண் துளை அறுவை சிகிச்சைகளை செய்யும் மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
43 வயதான ஆண் ஒருவரின் கல்லீரலில் புற்றுநோய் பரவி இருப்பதை அவரை பரிசோதனை செய்ததில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு நூல் துறை முறையில் மிகவும் சிக்கலான கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த நோயாளிக்கு ஒரு வருடத்திற்கு முன் உணவு குழாயில் புற்றுநோய் ஏற்பட்ட பொழுது ஹீமோதெரபி உடன் கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும் லேப்ராஸ்கோப்பி மூலம் புற்றுநோய் முழுவதுமாக நீக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் வழக்கமான பரிசோதனைகளின் போது ஒரு வருடத்திற்கு பின்னர் அதே புற்றுநோய் கல்லீரலில் மட்டும் பரவி உள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அரசு ராயப்பேட்டை மருத்துவமனையின் புற்றுநோய் துறை பேராசிரியர் சுப்பையா சண்முகம் தலைமையிலான அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் குழு நுண்துளை முறை உதவியுடன் புற்றுநோய் ஏற்பட்டிருந்த இடதுபுற கல்லீரலை நீக்கும் அறுவை சிகிச்சையினை சுமார் ஆறு மணி நேரம் செய்து முடித்தனர்.
அதன் பின்னர் பாதிப்புகள் ஏதும் இன்றி முழுமையாக குணமடைந்து ஒரு வாரத்தில் நோயாளி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இத்தகைய அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சையின் பலன்களான சிறிய தழும்பு, குறைவான வலி, எளிதாக இயல்பு நிலைக்கு திரும்புதல் ஆகிய பயன்கள் கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் இந்த அறுவை சிகிச்சை குறித்து புற்றுநோய் சிகிச்சை துறை தலைவர் சுப்பையா சண்முகம் கூறும் பொழுது, பொதுவாகவே நுண்துறை முறையில் (லேப்ராஸ்கோப்பி) செய்யப்படும் கல்லீரல் அறுவை சிகிச்சைகள் சிக்கலானவை. அதற்கு நோயாளிகளின் பராமரிப்பிற்கான சீரிய உள் கட்டமைப்புகள் வசதிகளுடன் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவை. அந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு பல லட்சம் செலவு ஆகும்.
ஆனால் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் எளியவர்களும் செய்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு ராஜ உத்சவ விருது - கர்நாடக அரசு அறிவிப்பு