சென்னை: பவளப்பாறைகள், மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் சுருக்குமடி வலை கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதித்து கடந்த 2000ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுருக்குமடி வலையைக் கொண்டு மீன்பிடிக்கலாம் என கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்தது.
நிபுணர் குழுவின் இந்த பரிந்துரையின்படி கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுருக்குமடி வலையைக் கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணை வந்தபோது, ஆழ்கடலில் மட்டுமே பவளப்பாறைகள், மீன் குஞ்சுகள் காணப்படும்போது நாட்டுப் படகில் சென்று 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுருக்கு மடி வலை கொண்டு, மீன் பிடிப்பதால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் வராது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், இது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்தமாக சுருக்குமடி வலைக்குத் தடை விதிக்கப்பட்டால் நாட்டுப்படகு கொண்டு, மீன்பிடிக்கும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்ட வலைகளில் விவரங்களையும், அளவுக்கு அதிகமாக மீன் பிடிக்கப்படுவதை அரசு எப்படி கண்காணிக்கப்போகிறது என்பது குறித்தும் 5 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு