எல்.ஐ.சி பங்கு விற்பனையை கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்னை அண்ணாசலையிலுள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ் குமார், “மத்திய அரசு எல்.ஐ.சி யின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல்.ஐ.சி யின் தற்போதைய சொத்து மதிப்பு 31 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம் 22 லட்சம் கோடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தால் அரசாங்கத்தின் எந்த திட்டத்துக்கும் பணம் கிடைக்காது. ஆனால் இதன் பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு உடனடியாக பணம் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது. எல்.ஐ.சி 40 ஆயிரம் கோடி பாலிசி தாரர்களின் சொத்து. எனவே இதன் பங்குகளை விற்க அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கத்தினர் நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் இதனை எதிர்த்து 18 கோடி தொழிலாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். இதனை மீண்டும் அமல்படுத்த அரசு முயன்றால் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாங்ககளுடன் இணைந்து எல்.ஐ.சி தொழிற்சங்ககளும் இணைந்து போராடும்” என்று தெரிவித்தார்.