சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 8) காலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், "259 கல்லூரி விடுதிகளில் இரண்டு கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்.
259 கல்லூரி விடுதிகளுக்கு ஒரு கோடியே 44 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சிக் கருவிகள், விளையாட்டுக் கருவிகள் வழங்கப்படும், 259 கல்லூரி விடுதிகளில் மாணவ மாணவியருக்குத் தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன், ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.
இயக்கங்கள், மாவட்ட அலுவலகங்களுக்கு ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ். (IFHRMS) திட்டத்திற்காக 85 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கணினிகள், உபகரணங்கள் வழங்கப்படும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்" உள்ளிட்ட 30 அறிவிப்புகளை வெளியிட்டார்.