சென்னை: LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணையில் உள்ளது.
எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொல்லகராதியை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 25ல் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் சொல்லகராதி குறித்த அரசு அறிவிப்பாணை கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்டதாகக் கூறி, அறிவிப்பாணை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய, மாறிய பாலினத்தவர் என்றும், திருநங்கை, திருநம்பி என இடத்துக்கு ஏற்ப அழைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் பாலீர்ப்பு ஆண் (gay), தன்பாலீர்ப்பு பெண் (lesbian) என்றும், இரு பாலீர்ப்புடைய நபர் (bisexual) என்றோ அழைக்கலாம் எனவும், பால்புதுமையர் (queer) என பெண்களை அழைக்க வேண்டும் என அரசு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, எல்.ஜி.பி.டி. பிரிவினரை குறிப்பிட, இந்தச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வரைவு விதிகள், சட்டத்துறை ஒப்புதல் பெற்று, உத்தரவுக்காக முதலமைச்சர் முன் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், விதிகளை இறுதி செய்து அறிவிக்க அரசுத்தரப்பில் ஆறு மாத கால அவகாசம் கோரப்பட்டது.
அதேபோல மூன்றாம் பாலினத்தவர்கள் கொள்கை வகுக்கவும் ஆறு மாத அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே ஓராண்டு கடந்த நிலையில் மேலும் ஆறு மாதம் அவகாசம் கோருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சமுதாயத்தில் ஓரங்கட்டப்படும் இப்பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறுவுறுத்தி, கொள்கை வகுக்கும் நடைமுறைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ஆர்டர்லி முறையை நான்கு மாதத்திற்குள் ஒழிக்க வேண்டும்...சென்னை உயர் நீதிமன்றம்