சென்னையில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நடைபயணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "ஏப்ரலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 471 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் பாஜக தனது முடிவை அறிவிக்கும். பண்பட்ட கட்சி, யார் மனதையும் புண்பட வைக்காது. அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். தேசிய தலைமைக்கும் எங்களுடைய கருத்துகளை கொண்டு சேர்த்துள்ளோம்.
இரட்டை இலை தொடர்பான வழக்கிற்கும் பாஜகவின் நிலைப்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். தற்போது பணப்பட்டுவாடா எப்படி செய்வது என்று அமைச்சர்களை வைத்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள அதிமுக காத்திருக்கட்டும். அதனால் தவறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் பணப்பட்டுவாடா செய்வது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். திமுக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து யார் பலமான வேட்பாளரோ அவருக்கு வாக்களிக்க சொல்லுவோம்" எனக் கூறினார்.