'அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்ட 10 ஆண்டுகள்' என்ற தேர்தல் பரப்புரை கையேட்டை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’அதிமுக அரசு மோடியிடம் சரணடைந்ததால் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 10 கேள்விகளைத் தமிழ்நாடு அரசை நோக்கி எழுப்புகிறோம். அதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்’ என்றார்.
அந்தக் கேள்விகள் பின்வருமாறு:
- நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான டெண்டர்களை உரிய தகுதியான நபர்களுக்கு அளிக்காமல் வேண்டப்பட்டவர்களுக்கு அளித்தது ஏன்?
- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏன் சுதந்திரமான நீதி விசாரணைக்கு உத்தரவிடவில்லை?
- எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏன் விசாரணைக்கு உத்தரவிடல்லை? வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
- தமிழ்நாடு அரசுக்கு லஞ்சம் கொடுத்ததாக cognizant நிறுவனம் கூறியது தொடர்பாக ஏன் நடவடிக்கை இல்லை? Cognizant நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கியவர்கள் யார்?
- குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
- எல்.இ.டி. விளக்குகள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஏன் விசாரணை நடத்தவில்லை?
- வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்தது தொடர்பாக ஏன் விசாரணை நடத்தவில்லை?
- லஞ்ச, ஊழல் புகார்களை விசாரிக்கும் விசாரணை அமைப்பில் ஏராளமான ஊழல் வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருப்பது ஏன்?
- தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், அலுவலர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகக் கூறப்பட்ட புகார்கள் தொடர்பாக ஏன் விசாரணை நடத்தவில்லை?
- தமிழ்நாடு அரசு மீது ஊழல் புகார்கள் கூறிய பத்திரிகையாளர் அன்பழகனைச் சிறையில் அடைத்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்
தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்படும். மக்களுக்கான பணியாளர்களாக திமுக கூட்டணி ஆட்சி செயல்படும். முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், அலுவலர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக, காங்கிரஸ் பெண்களை மதிப்பதில்லை எனப் பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால் பிரதமர் மோடி, அவரது கட்சியினர் பெண்கள் குறித்து தொடர்ந்து அவதூறாகப் பேசிவருகிறார்கள்; அதற்குப் பதிலளிக்க வேண்டும். இதை விடுத்து திமுக, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு கூறுவது ஏற்புடையதல்ல. பெண்கள் குறித்து கூறிய கருத்திற்காக பிரதமர் மோடி முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக காங்கிரஸ் கூட்டணி மீது தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்காலத்திலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும்" என்றார்.
முதலமைச்சர் குறித்து ஆ. ராசாவின் சர்ச்சைப் பேச்சுத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ’இந்த விவகாரத்தில் ஆ. ராசா மன்னிப்புக் கேட்டுவிட்டார். இதனால் இந்த விவகாரம் முடிந்துவிட்டது. பொதுவெளியில் தலைவர்கள் பேசும்போது கண்ணியத்துடனும், கவனமாகப் பேச வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க:’ஊர்வலம் செல்வதைத் தவிருங்கள்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்