சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனவும் கைது நடவடிக்கை செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார். இந்த உத்தரவு புழல் சிறையில் உள்ள அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அவரது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று மாலை முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, சிறிதுநேரத்திற்கு முன்பு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறையினர் தங்கள் காவலில் எடுத்தனர். பின், அவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கவுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!