சென்னை: ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக கடந்த வார தொடக்கம் முதலே தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்தது.
அதேநேரம் வார இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தங்கம் விலை கணிசமான அளவு சரிந்தது. இது நகை வாங்கக் காத்திருந்த நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இன்று தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் சவரனுக்கு 240 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
திடீர் தங்கம் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் கடந்த வார இறுதியில், 22 கேரட் ஆபரண தங்கம் கிராம் 5 ஆயிரத்து 335 ரூபாய்க்கும், சவரன் 42 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி (திங்கட்கிழமை) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 365 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்து உள்ள நிலையில், வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 20 காசுகள் குறைந்து 76 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டத்தின் சராசரி 3 புள்ளி 4 சதவீதமாக குறைந்து உள்ளதாகவும், அதன் காரணமாக பெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என்பதால் டாலர் குறியீட்டின் மதிப்பு உயர்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பாக தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போலீஸ் எனக் கூறி நகை வியாபாரியிடம் ரூ.1½ கோடி அபேஸ்..