சென்னை: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26 முதல் இன்று (ஆக 24) வரையில் www.tneaonline.org www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.
அதன் அடிப்படையில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேர இன்று (ஆகஸ்ட் 24) இரவு 12 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 25) ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.
இதுவரையிலான விண்ணப்பங்கள்
மேலும் விண்ணப்பித்த மாணவர்கள் அதற்குரிய கட்டணத்தை வெள்ளிக்கிழமை வரை செலுத்தலாம் எனவும், மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுவரை பொறியியல் படிப்பில் சேர, பொறியியல் கலந்தாய்விற்கு 1 லட்சத்து 74 ஆயிரத்து 171 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 43 ஆயிரத்து 774 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
1 லட்சத்து 38 ஆயிரத்து 533 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர் என தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கலந்தாய்வு விவரம்
மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொறியியல் சேர்க்கை: விளையாட்டு வீரர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியீடு!