சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமாக கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள மெய்வாடி கிராமத்தில் 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோயிலுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டுள்ள இந்த நிலத்தை, இனாம் ஒழிப்பு சட்டத்தில் எடுக்க 1963ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என தீர்ப்பளித்தது.
இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் எனக் கூறி செல்லப்பன் என்பவர், 15,000 ரூபாய்க்கு பழனிச்சாமி என்பவருக்கு 1988ஆம் ஆண்டு அடமானம் வைத்துள்ளார். இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை உடுமலைப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து கோயில் இணை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், “நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் மோசடியாக பெற்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது.
எனவே உடுமலைப்பேட்டை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த 6.5 ஏக்கர் நிலம், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமானது. அடுத்த 12 வாரங்களில் 6.5 ஏக்கர் நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காந்திமதிக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர் - திருநெல்வேலியில் திருவிழா