சென்னை: குவைத்தில் இருந்து குவைத் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் காலை 7 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்து விட்டு, அதன் பின்பு காலை 8:10 மணிக்கு குவைத்துக்கு புறப்பட்டு செல்லும். வழக்கம் போல குவைத் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 7 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து குவைத் செல்வதற்கு 187 பயணிகள் காத்து இருந்தனர். அவர்கள் அனைவரும் அதிகாலை 5 மணிக்கு முன்னதாகவே சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தை இயக்கிய விமானி மற்றும் துணை விமானி இருவரும் ஓய்வுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று விமானத்தை இயக்கி வந்த விமானிகள் தான் விமானத்தை இயக்க வேண்டி இருந்தது. ஆனால் விமானத்தை இயக்க வேண்டிய தலைமை விமானி சென்னை விமான நிலையத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் விமானி வராததால் குவைத் விமானத்தில் பயணிகள் ஏற்றப்படாமல் விமான நிலையத்திலேயே அமர வைக்கப்பட்டனர். இதையடுத்து குவைத் விமான நிறுவன அதிகாரிகள் தலைமை விமானியை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பின் தலைமை விமானி காலதாமதமாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தாமதமாக வந்ததாக விமானி தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலைய மருத்துவ அதிகாரிகள் விமானியின் உடல் நலத்தை பரிசோதித்தனர். பரிசோதனையில் விமானியின் உடல் நலம் நல்ல முறையில் இருந்ததோடு விமானத்தை இயக்கும் நிலையிலும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதன் அடிப்படையில் தலைமை விமானி விமானத்தை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், விமானி விமானத்தின் இயந்திரங்களை சரிபார்த்த பின்பு பயணிகள் 187 பேரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். இதையடுத்து சென்னையில் இருந்து குவைத் செல்லும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக இன்று காலை 10:40 மணிக்கு சென்னையில் இருந்து, குவைத் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து குவைத் செல்ல வேண்டிய குவைத் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் விமானியின் வருகை தாமதம் காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் 187 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதையும் படிங்க: சென்னையில் 41 மின்சார ரயில் சேவைகள் ரத்து! இதுதான் காரணமா!