உத்தரப்பிரதேத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நம்பர் ஒன் ஊழல்வாதி என தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்மா காத்திருக்கிறது என மோடிக்கு பதலளித்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் மோடியின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் பிரதமராக பல சாதனைகளை புரிந்து இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தியவர் அமரர் ராஜீவ்காந்தி. இத்தகைய வரலாற்று சாதனைகளை புரிந்த ராஜீவ்காந்தி அவர்களை கொச்சைப்படுத்துகிற வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது மிகுந்த அநாகரீகமற்ற செயலாகும்.
நடைபெற்று வருகிற நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மே 23 ஆம் தேதி அன்று தீர்ப்பு வெளிவருகிற போது மீண்டும் பிரதமராக வர முடியாது என்கிற எதிர்ப்பு நிலை உருவாகி வருகிற நிலையை அறிந்த நரேந்திர மோடி சமீபகாலமாக பதற்றத்துடன் பேசி வருகிறார். அச்சத்தின் பிரதிபலிப்பு அவரது முகத்தில் தெரிகிறது.
இதனால் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி தேர்தல் பிரச்சாரத்தை திசைத் திருப்ப முயற்சிக்கிறார். ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க துணிவில்லாத பிரதமர் மோடி, மறைந்த தியாகத் தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை கொச்சைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய இழிவான, அநாகரீக பேச்சுக்கு உரிய தண்டனையை பெறுவதில் இருந்து நரேந்திர மோடி தப்ப முடியாது" என்று எச்சரித்துள்ளார்