சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று (பிப்ரவரி 26) கே.எஸ். அழகிரி செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநகராட்சியில் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க இருப்பதாகத் தெரிவித்தார்.
(விசிக தலைவர் திருமாவளவன் தங்களுக்கு ஒன்பது மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளைத் தர வேண்டும் என ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்திருந்தார் - நினைவூட்டல்)
மேலும், "இரண்டு தினங்களாக பாஜக - அதிமுகவினர் காங்கிரஸ் பற்றி பல அவதூறான விஷயங்களைச் சொல்லிவருகிறார்கள். நீங்கள் ஒன்றில் உரிமை கோருகிறீர்கள் என்றால் அதில் உண்மை, நியாயம் இருக்க வேண்டும்.
மேலும், காங்கிரஸ் வெற்றிபெற்றதற்குக் கூட்டணிதான் காரணம் என்று பாஜக கூறுகிறது" எனக் கூறிய அவர், ஆம் கூட்டணிதான் காரணம், நீங்கள் கூடத்தான் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தீர்கள் என்று நியாயப்படுத்தி நினைவூட்டினார்.
மேலும், நீங்கள் (பாஜக) தனித்து நிற்பது உங்கள் கொள்கையா? என்று கேள்வி எழுப்பிய அவர், "நீங்கள் இந்தத் தேர்தலில்கூட அதிமுகவுடன் கூட்டணி பேசினீர்கள். ஆனால், உங்களுக்கு அதிக எதிர்ப்பு இருக்கும் கரணத்தினால் அதிமுக யோசித்தது.
காங்கிரஸ் அதிமுக பற்றி தவறாகச் சொல்லவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்த கரணத்தினால் மக்கள் உங்களைப் புறக்கணித்தார்கள். தமிழ்நாடு மக்களுக்கு பாஜக செய்யும் தீங்கினை வேடிக்கைப் பார்த்தீர்கள். அதைத் தான் நாங்கள் கூறினோம். அதற்காக அதிமுக கோபித்துக் கொள்கிறது.
மேலும், இன்றும் இந்தியாவில் பெரிய கட்சி காங்கிரஸ்தான், இன்றும் நாங்கள் வலிமையான அகில இந்திய கட்சி என்று தெரிவித்துக்கொள்கிறோம். நிச்சயம் நாங்கள் ஒருநாள் ஆளும் கட்சியாக வருவோம்" என்றார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரி செய்தியாளர் சந்திப்பின்போது தலைவர்கள் அமரும் மேடையில் காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு நிர்வாகி முனுசாமி அமர்ந்ததற்கு முன்னாள் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசி மேடையிலிருந்து அவரைக் கீழே இறங்கும்படி வசைபாடினார். இதன் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
கே.எஸ். அழகிரி முன்பே இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. நிர்வாகிகளின் மோதல் போக்கு காரணமாகச் செய்வதறியாமல் திகைத்த அழகிரி திக்குமுக்காடிய நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர். இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.