சென்னை: கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கொடுஞ்செயல்களைக் கண்டித்து சிதம்பரம் வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, ”மணிப்பூர் சம்பவம் மனித குல மனசாட்சியை உலுக்கி விட்டது. இந்த சம்பவம் பற்றி பேச பிரதமர் மறுக்கிறார். மேலும் மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர்” என கூறினார்.
அதன் பிறகு நேற்று (ஜூலை 28) மாலை நடைபெறவிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்க இருந்தார். அதனால் அவர் சிதம்பரம் அருகே திருப்பணிநத்தம் கிராமத்தில் அவரது வீட்டில் தங்கி உள்ளார். இதனையடுத்து, நேற்று காலை அவரது வீட்டு வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளார்.
நடைபயற்சியின்போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்துள்ளார். இவ்வாறு கீழே விழுந்த கே.எஸ்.அழகிரிக்கு நெற்றி மற்றும் கால்முட்டி ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கே.எஸ்.அழகிரி உடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி மற்றும் காயம் அடைந்த இடங்களில் சிகிச்சை செய்து கட்டு போட்டுள்ளனர்.
இந்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (ஜூலை 28) காலை சிதம்பரத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது தவறி கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் கால்முட்டி ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தற்போது கே.எஸ்.அழகிரி வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், நேற்று மாலை காட்டுமன்னார்கோயிலில் நடைபெறுகிற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்.எல்.சி முற்றுகை போராட்டம்: அன்புமணி ராமதாஸ் கைது; போலீசார் மீது தாக்குதல், பாமகவினர் மீது தடியடி!