கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால் சிறு அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களை தனிமைப்படுத்தும் மையங்களாக (கோவிட்-19 கேர் சென்டர்) மாற்றப்பட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக அண்ணா பல்கலைக்கழகத்தை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவுசெய்து, அப்பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதில் பேரிடர் மேலாண்மைச் சட்டவிதியின்படி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் மாணவர்களின் உடைமைகளை விடுதிகளிலிருந்து காலிசெய்து தர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இக்கடிதத்திற்குப் பதிலளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, ”அதிகரித்துவரும் கரோனா சூழலில் மாணவர்கள் விடுதிகளை எவ்வாறு காலி செய்துதர முடியும். விடுதிகளைக் காலி செய்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன” என்றார்.
இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளைத் தவிர்த்து, வகுப்பறைகள், பயன்படுத்தாமல் இருக்க கட்டடங்கள், அரங்கம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை மாநகராட்சியிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.