சென்னை: கிருஷ்ணகிரி கிடாம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் சரண்யா என்பவரை காதல் திருமணம் செய்திருந்தார். இவர்கள் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 21 ஆம் தேதி வேலை விசயமாக சென்று கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.
காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் காதலியின் தந்தையால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் கடந்த 21 ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் கிடாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் சரண்யா என்பவரை காதல் திருமணம் செய்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் தந்தையான சங்கர் தனது உறவினர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ஆயுதத்தால் தாக்கி ஜெகனுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் சங்கர் அதிமுக கிளை செயலாளராக இருப்பதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. எனினும் இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க திமுக ஆட்சியில் தொடர்ந்து காவல்துறை சார்பாகவும் மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக" தெரிவித்தார்.
மேலும், "சமூக நீதி மண்ணான தமிழகத்தில் இது போன்ற சம்பவங்களில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் மனித நேயத்தை பேணி காக்க வேண்டும்" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கிடையே கொலையாளி சங்கர் அதிமுக கிளை செயலாளர் என கூறியதற்கு அதிமுக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் முனுசாமி, கோவிந்தசாமி, அருண்மொழி தேவன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரான துரைமுருகன் காவல்துறையின் விசாரணையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாளை மாற்று கருத்து வரும் எனில் அந்தத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் திருப்பி பேரவையில் வாசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி இருப்பவர் அதிமுக கிளைச் செயலாளர் என முதலமைச்சர் தெரிவித்ததற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர்" - அவதூறு பேச்சுக்காக ராகுலுக்கு சிறை