சென்னை கோயம்பேடு சிறு வியாபாரிகள் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு, தாமாக முன்வந்து விடுமுறை அளித்தனர். விடுமுறை விடப்பட்டதிலிருந்து, சிறு மொத்த வியாபாரக் கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில், திருமழிசைக்கு மாற்றப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை இன்று முதல் இயங்கி வருகிறது.
இதனால், சிறு மொத்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு மொத்த வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தங்கள் கருத்துகளை முன்வைத்து, அமைதியான முறையில் கோயம்பேடு காய்கறி சந்தையின் நுழைவுவாயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் சிறு மொத்த வியாபாரிகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்து வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும். கடந்த 20 நாட்களாக மூடிய நிலையில் உள்ள மலர் அங்காடி, காய்கறி அங்காடி, பழ அங்காடி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து மீண்டும் எங்களுக்கு வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
மொத்த வியாபாரம் மட்டும் நடந்தால், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாவார்கள். சிறு மொத்த வியாபாரத்தை நம்பி, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் குடும்பம் தத்தளிக்கும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும் சி.எம்.டி.ஏ அலுவலர்கள் தங்களின் வியாபாரத்தைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும்; எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவப் படிப்பை தொடர முடியாத பழங்குடி மாணவி!