கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்தோர் கரோனா வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தs சந்தை தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், அதில், "கொத்தவால் சாவடியில் இயங்கி வந்த காய்கறிச் சந்தை 1996ஆம் ஆண்டு முதல் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதில், 2014ஆம் ஆண்டு முதல் உரிய அனுமதியுடன் மொத்தக் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனால், காய்கறிகளை வாங்க கோயம்பேட்டில் உள்ள சில்லறை விற்பனைச் சந்தையில் மக்கள் குவிந்ததால் கரோனா தொற்று பரவியதாகக் கூறி மே 5ஆம் தேதி கோயம்பேடு காய்கறிச் சந்தை மாநகராட்சி நிர்வாகத்தால் தற்காலிமாக மூடப்பட்டது.
சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில் அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், உணவு தானிய பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், கோயம்பேடு உணவு தானியச் சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க கரோனா வைரஸ் நோய் தடுப்பு சிறப்பு அலுவலர், சிஎம்டிஏ, மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, இதுதொடர்பாக சிறப்பு அலுவலர், சிஎம்டிஏ, மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதையும் பார்க்க: பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் எதிரொலி - உயரும் இந்திய பங்குச் சந்தை!