கடந்த மே மாதம் 21ஆம் தேதி கோவையில் விஜயகுமார் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த குற்றவாளி தலைமறைவானதால், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலஜா சாலையில் ஒரு இளைஞர் காவல்துறையினர் வாகனத்தை பார்த்ததும் ஓட்டம்பிடித்துள்ளார்.
அவரை விரட்டி பிடித்த காவல்துறையினர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த சுல்தான் அலாவுதீன்(21) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில், கடந்த மாதம் கோயம்புத்தூரில் விஜயகுமார் என்ற நபரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி சென்னையில் இருந்தேன், இரவு நேரங்களில் மட்டும் வெளியே வருவேன். அப்படி வரும்போது என்னை பிடிப்பதற்காக நீங்கள் வருவதாக நினைத்துதான் ஓட்டம் பிடித்தேன் என சுல்தான் அலாவுதீன் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.இதனையடுத்து சென்னை காவல்துறையினர் அவரை கோவை காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளனர்.