முன்னாள் முதலமைச்சரின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியது. இதனால் வழக்கில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பு பலரிடத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”திமுக ஆட்சியமைந்த பிறகு நடைபெற்ற ஜெ.ஜெ.நகர் அம்மா உணவகம் மீதான தாக்குதல், திருச்சியில் மணல் கடத்தல் வழக்கு, வட்டாட்சியர் மீது தாக்குதல் உள்ளிட்ட அனைத்து புகார்களுக்கு அதே நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதே நேரத்தில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் எவ்வளவு நாட்கள் கழித்து கைது செய்யப்பட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்.
கோடநாடு வழக்கு குறித்து சட்டப்பேரவையில் பேசியது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். கோடநாடு வழக்கு தொடர்ந்து நடத்தப்படும். விசாரணையில் உண்மைக் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது” என்றார்.