கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே, தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதனால், கோடை வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் தர்பூசணி, கரும்புச்சாறு, இளநீர், பழரசம், பழவகைகள் ஆகியவற்றை உட்கொள்கின்றனர். இதனால் குளிர்பானங்கள் முதலிய விற்பனைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அந்த வரிசையில் மண்பானை விற்பனையும் அடங்கும்.
மக்கள் குளிர்சாதன பெட்டி வருவதற்கு முன் வெயில் காலத்தில் தண்ணீரை பானையில் ஊற்றி குடித்துவந்தனர். அது பயன்பாட்டு வந்த பிறகு மண்பானை விற்பனை சற்று சரிவைச் சந்தித்தது. இருப்பினும் மக்கள் வெயில் காலத்தில் பானையில் வைத்து தண்ணீர் குடிப்பதை அதிக அளவில் விரும்பினர்.
இதனால் வெயில் காலத்தில் மட்டும் மண் பானை விற்பனை அமோகமாக இருக்கும். ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 வரை பானைகள் விற்பனை ஆகும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனால் கடந்த ஆண்டு மண்பானை விற்பனை என்பது இல்லாமல் இருந்தது. இதனால் மண்பானை விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் தளர்வுகள் உள்ளதால் மீண்டும் மண்பானை விற்பனை மெள்ள மெள்ள தொடங்கியுள்ளது. கோடம்பாக்கம் பிரதான சாலையில் கிட்டத்தட்ட 500 மீட்டர் மண்பானை விற்பனை செய்துவருகின்றனர், அங்கு சாதாரண பானை மட்டுமில்லாமல் மக்களைக் கவர்வதற்குப் பானையில் தண்ணீர் வருவதற்கு குழாய் அமைப்பது, தண்ணீர் எடுத்துச் செல்வதுபோல் பாட்டில் வடிவம் எனப் பல்வேறுவிதமாக விற்பனை செய்துவருகின்றனர்.
குளிர்சாதன பெட்டி வந்தாலும் மக்கள் மண்பானையை அதிக அளவில் பயன்படுத்த விரும்புகின்றனர் என மண்பானை விற்பனையாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "முன் போன்று வியாபாரம் இல்லை. ஆனால் மக்கள் குளிர்சாதன பெட்டி வந்தாலும் மண்பானையைப் பயன்படுத்த விரும்புகின்றனர். மக்கள் வாங்குவதற்குத் தயாராக இருந்தாலும் கரோனாவால் அவர்கள் கைகளில் பணம் இல்லை. தற்போது ராஜஸ்தானி பானை, பாட்டில் வடிவம், சின்ன சின்ன கப் போன்ற வடிவங்கள் உள்ளன. இருப்பினும் தமிழ்நாட்டில் செய்யும் பானை அதிக அளவில் மக்கள் விரும்புகின்றனர்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கும் தண்ணீர் குடித்தால் உடல் பிரச்சினை வரும். ஆனால் பானையில் வைத்து குடித்தால் உடலுக்கு நல்லது. கரோனா பரவலுக்கு முன் சித்திரை மாதத்தில் ஒரு நாளைக்கு 2000 முதல் 3000 வரை பானைகள் விற்பனை ஆகும். ஆனால் தற்போது 500 ரூபாய் வியாபாரம் செய்வது கடினமாக உள்ளது. இதற்கு அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கரோனாவுக்குப் பின் மக்களிடையே பணப்புழக்கம் இல்லை. நாங்கள் 10 ரூபாய் கொடுத்து ஒரு பொருள் வாங்கினால் 3 முதல் 5 ரூபாய்க்கு மக்கள் கேக்கிறார்கள். முன் 10 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் அதில் எங்களுக்கு லாபம் இருக்கும் தற்போது அது இல்லை. தினக்கூலிகூட எங்களுக்கு கிடைக்கவில்லை என மற்றொரு வியாபாரி கூறுகிறார்.
மண்பானை விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு: தலைகீழாகத் தொங்கியபடி முதியவர் யோகாசனம்