தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் கடந்த 25ஆம் தேதி காலமானார். அவரின் இறுதி அஞ்சலி மற்றும் காரிய நிகழ்வுகள் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. இதை முடித்துக்கொண்டு முதலமைச்சர் நேற்று சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (அக். 19) சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அதிமுக அவைத்தலைவர், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கவிஞர் வாலி, வைரமுத்து உள்ளிட்டோர் முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியிடம், 800 படத்திலிருந்து விலகிவிட்டீர்களா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். நன்றி வணக்கம் என்றால் முற்றுப்புள்ளி வைத்ததாகத்தான் அர்த்தம். இதைப்பற்றி இனி பேச வேண்டாம்' என்றார்.
முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்குச் சென்று நேரில் இரங்கல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 800' படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்