சென்னை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகளவு கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியதாலும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு இடையே பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது.
இந்தத் தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அதேபோல, லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் மகா கூட்டணி அமைத்தது.
இந்தத் தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி கட்சியே வெற்றி பெறும் எனத் தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்புகள் கூறிவந்தாலும், தேர்தல் நடைபெற்றதற்குப் பின் பலரும் காங்கிரஸின் மகா கூட்டணியே வெற்றி பெரும் எனத் தெரிவித்தனர்.
அதைப் போலவே, காலை சுமார் 10.30 மணிவரை முன்னணி பெற்று வந்த மகா கூட்டணி, திடீரென பின்னடைவை சந்தித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி பிகார் தேர்தலில் பாஜக-ஜேடியு தலைமையிலான கூட்டணியே முன்னணியில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள குஷ்பு, "அடிக்கடி கை கழுவுங்கள் இது corona சொல்லிய பாடம்
நிரந்தரமாய் கையை கழுவுங்கள் இது மோடி ஜி பிகாரில் உணர்த்திய பாடம்
வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்!! " எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸை நிரந்தரமாக கை கழுவியதைப் போல், 2021-இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் கை கழுவ வேண்டும். இதற்கான பாடத்தை இந்தத் தேர்தலில் பிரதமர் கற்பித்துள்ளார் என அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தலில் இதே நிலையே நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிகார் தேர்தலில் குதிரை பேரம் நடக்குமா?