தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக, தமிழ்நாடு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக "காவலன்" செயலியை உருவாக்கி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மதுரவாயலில் மருத்துவ மாணவர்களுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையால் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், போக்குவரத்து காவல் இணை ஆணையர் ஜெய கெளரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார். இதில் மாணவர்கள் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய காவல் இணை ஆணையர் ஜெய கெளரி," தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். பெண்கள் ஆபத்து நேரங்களில் பதட்டம் அடையத் தேவை இல்லை. நிதானமாக சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும். அந்த நேரங்களில் உடனடியாக காவலன் செயலியை அழைத்தால் நாங்கள் மற்றதை பார்த்துக்கொள்வோம். சிறு ஆபத்தோ பெரிய ஆபத்தோ எதுவாக இருந்தாலும் காவலன் செயலி மூலம் உதவியை நாடலாம்'' என உறுதியளித்தார். இதில் மாணவ மாணவிகள் 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு ஹெல்மெட் வாங்குனா ஒரு கிலோ வெங்காயம் இலவசம் - சேலத்தில் விற்பனை படுஜோர்