சென்னை:தாம்பரம் சானிடோரியம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சாலையோரம் வாழ்ந்து வருவதாக சென்னை காவல்துறையின் காவல் கரங்கள் அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு சென்ற காவல் கரங்கள் அமைப்பினர் அந்த நபரை கண்டறிந்து விசாரித்தபோது அவரது பெயர் டேவிட் துரைராஜ் என்பதும், அவர் கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் டேவிட் வீட்டைவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன் வெளியேறி சென்னை வந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்ததும், இறுதியாக தாம்பரம் சானிடோரியம் பகுதியில் தங்கி குப்பையில் உள்ள பிளாஸ்டிக், இரும்பு போன்ற விலைபோகும் பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வந்ததும் காவல் கரங்கள் அமைப்பினருக்கு தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல் சிறிதளவு மன நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், குப்பைகளை எடுப்பதற்காக டேவிட் தனது கைகளாலேயே சக்கரங்கள் கொண்ட ஒரு பிரத்யேக வாகனத்தை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பகுதியில் இருந்து குப்பைகளை எடுத்து விற்பனை செய்து வந்ததை அறிந்து காவல் கரங்கள் அமைப்பினரே ஆச்சரியம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து டேவிட்டை மீட்ட காவல் கரங்கள் அமைப்பினர் அவரை காப்பகத்தில் சேர்த்து உரிய மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கினர். மேலும் கோவில்பட்டியில் உள்ள டேவிடின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து விசாரித்த காவல் கரங்கள் அமைப்பினருக்கு அவர்கள் அளித்த பதில்கள் ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
திருமணமான டேவிட்டுக்கு தற்போது 26 வயதில் மகாலட்சுமி என்ற மகளும், 24 வயதில் கார்த்திக் என்ற மகனும் இருப்பதாகவும், 25 ஆண்டுகளுக்கு முன் தொழில் தொடங்க எண்ணி நஷ்டம் அடைந்ததால் சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட டேவிட் குடும்ப பிரச்சனையால் சென்னைக்கு சென்று தொழில் தொடங்கப் போவதாகக் கூறி 1997 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வெகுநாட்களாகியும் டேவிட் வராததால் அவரை தேடி வந்த குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஒரு கட்டத்தில் 2004 ஆம் ஆண்டு வந்த சுனாமியில் சிக்கி டேவிட் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதி கடந்த 7 ஆண்டுகளாக பிள்ளைகளுக்கு தீட்டு ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணி டேவிடுக்கு திதி கொடுத்து வருவதும், 25 ஆண்டுகளாக காணாமல் போன டேவிட் மறைந்த முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரான பி.எச் பாண்டியன் அண்ணன் மகன் என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று(நவ.30) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையர் லோக நாதன் முன்னிலையில் காவல் கரங்கள் அமைப்பினர் மூலம் மீட்கப்பட்ட டேவிட் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது அடிப்படை தேவைக்கான உடை உள்ளிட்ட உதவிப் பொருட்களை டேவிடுக்கு கூடுதல் ஆணையர் லோகநாதன் வழங்கி அவருக்கு வாழ்த்து கூறி வழியனுப்பினார்.
சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை எனவும், ஒருமுறை தோற்றாலும் ஊருக்குச் சென்று குடும்பத்தாருடன் மீண்டும் தொழில் செய்வேன் என டேவிட் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படிங்க:பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!