நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, தன்னிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், இந்தத் தொகையை தான் தரவில்லை என்றால் தன் சம்பந்தி ரஜினிகாந்த் தருவார் என கடிதம் கொடுத்ததாகவும், ரஜினி பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரிராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ரஜினிகாந்துக்கு உத்தரவிட வேண்டும் என சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமின்றி போத்ராவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அவர் மறைந்து விட்டதால், வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. இவ்வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இவ்விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று(பிப்.25), இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரிராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "10 லட்சம் ரூபாய் மட்டுமே போத்ராவிடம் கடன் பெற்றதாகவும், அந்த தொகையை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார். கடன் பெறுவதற்காக கொடுத்த வெற்று காகிதத்தில், பணத்தை தராவிட்டால் ரஜினி தருவார் என போத்ராவே எழுதிக் கொண்டதாகவும்,காவல்துறை விசாரணையிலும், கீழமை நீதிமன்ற விசாரணையிலும் கூட போத்ரா இதை ஒப்புக் கொண்டுள்ளார்
ரஜினி, சம்பந்தியாக இருந்தாலும், அவருடன் வர்த்தக ரீதியாக எந்த தொடர்பும் இல்லையெனவும், குடும்பத்தினர் பெயரை களங்கப்படுத்தி பணம் பறிக்க முயல்வதால் சமாதானம் செய்து கொள்ள விரும்பவில்லை. வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயார். சினிமா துறையில் உள்ளவர்கள் மீது திட்டமிட்டு பொய்யான ஆதாரங்களை உருவாக்கி பணம் பறிப்பதையே போத்ரா நோக்கமாக கொண்டு செயல்பட்டதாகவும், ஆண்டுக்கு இது மாதிரி குறைந்தது 150 பேரிடமாவது போத்ரா செய்வது வாடிக்கை என கஸ்தூரிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
65 லட்சம் ரூபாய் பணமாக கொடுத்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ககன் போத்ராவுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: செம்மொழியான தமிழ்மொழி பிரதமர் மோடி மனதுக்கு நெருக்கமானது- ஓ.பன்னீர் செல்வம்!