கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்தும் விதமாக இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
நாளை (ஏப்ரல் 25) ஞாயிற்று கிழமை என்பதால் இன்றே மீன் வாங்க பொதுமக்கள் காசிமேட்டில் கூடினர். காசிமேடு மீன்பிடி சந்தையில் மீன்களை வாங்க ஏராளமான கூட்டம் குவிந்ததால் கரோனா வேகமாக பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், பெரிய விசைப்படகுகள் ஆழ்கடல் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை, பைபர் படகு, நாட்டு படகு, கட்டுமரம் உள்ளிட்ட கரையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த மீன் வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டன. மேலும், சில்லறை மீன் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது. தற்காலிகமா காசிமேடு சூரிய நாராயண சாலையில் மயானத்திற்கு அருகே மீன் கடைகள் அமைக்கப்பட்டு மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஊரடங்கில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததால் காசிமேடு மீன் சந்தை எப்போதும் போல திருவிழா போன்று காட்சி அளிக்கிறது.