கரூர்: நெரூர் தென்பாகம் கிராமத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமாக மூன்று தலைமுறையாக பயன்பாட்டிலுள்ள சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவரும் தனி நபர்களிடம் இருந்து பாதையை மீட்டுத்தரக் கோரி ஆகஸ்ட் 15 ஆம் இரவு சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்தநாள் வரை நடைப்பெற்ற இந்த போராட்டத்தில் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த வேலுசாமி (43) என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஆட்சியர் நிதியுதவி
உயிரிழந்த வேலுச்சாமியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதை அறிந்து கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து ஈம சடங்கு நிதியாக 22 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினார்.
மேலும்,மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின் கீழ் ரூபாய் ஒரு லட்சம், ஆதரவற்றோர் விதவைச் சான்று, ஆதரவற்றோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை வேலுச்சாமியின் மனைவி மணிமேகலையிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில்,மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் (பொறுப்பு) சந்தியா,வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் நெகிழ்ச்சி
உயிரிழந்த வேலுச்சாமியின் மூத்த மகன் சந்தோஷ் (19) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இன்னொரு மகன் சாரதி (13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் கல்வி மேற்படிப்புக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
மயான பாதை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியர் உயிரிழந்த குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்து, பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் அளித்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’சிபிஐ தன்னாட்சி அமைப்பாக செயல்பட தேவையான சட்டத்தை உருவாக்க வேண்டும்’ - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை