சென்னை: கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக - காங்கிரஸ் இடையே ஆட்சியை பிடிப்பதற்காக கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறது. கர்நாடகாவின் புலிகேசி தொகுதியில் மட்டும் வேட்பாளரை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக சார்பாக 3 வேட்பாளர்கள் போட்டி என அறிவித்தனர். இதில் புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், வேட்புமனு பரிசீலனையில் புலிகேசிநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதற்கு முறையாக படிவத்தை பூர்த்தி செய்யவில்லை, நேரம் கடந்து சமர்ப்பிப்பு போன்ற காரணங்கள் கூறப்பட்டன. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் கோலார் தங்கவயல் வேட்பாளர் அனந்தராஜூம் வேட்புமனுவை சுயேட்சையாக கருதி ஏற்றுக்கொண்டது. காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரின் வேட்புமனு அதிமுக என ஏற்றுக்கொள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பாக புலிகேசிநகர் தொகுதியில் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் எனவும் ஏன் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அதிமுக என அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது எனவும் கர்நாடகா மாநில தேர்தல் செயலாளருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், "படிவம் ஏ மற்றும் படிவம் பி-யில் கையெழுத்திட்டவர் அதிமுகவின் எந்த பதவியில் உள்ளார். நீங்கள் முறைகேடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் உங்கள் மீது தேர்தல் ஆணைய சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற துணை நில்லுங்கள்: முதலமைச்சர் வேண்டுகோள்!