சென்னை: கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு 25 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 5 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து 15 நாட்கள் திறந்து விட கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இதை கர்நாடக அரசு மறுத்ததால், இதையடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு கன்னட அமைப்புகள் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில், இன்று (செப்-29) கர்நாடகா முழுவதும் கடை அடைப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து சேவை பாதிப்பு: தமிழகத்தில் இருந்து பெங்களூரு, மைசூரு செல்லும் பேருந்துகள் மாநிலத்தின் எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், நீலகிரியில் இருந்து தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அத்திப்பள்ளி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திலிருந்து கா்நாடகத்துக்கு இயக்கப்படும் பேருந்துகள் நேற்று இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலிருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழக கர்நாடக எல்லையில் ஊட்டி, பண்ணாரி மற்றும் மாதேஸ்வரன் மலை வழியாக மைசூரு உள்ளிட்ட கா்நாடகப் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னையின் பேருந்து சேவை முடக்கம் : சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்துதான் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது. தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் பந்த்தால், சென்னையில் கர்நாடக மாநிலப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கு தினமும் 2,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலையால், தமிழகத்தில் பேருந்துகளை எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்று காலை தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் குறைந்த அளவே ஓசூருக்குச் சென்றன” என்று தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்பு: இதன் விளைவாக தமிழக - கர்நாடக எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து தொடர்பாக நிலைமைக்கேற்ப கா்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் உயர் அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. தருமபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்!