காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டு வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வரும் நரேந்திரன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில், இன்று (மார்ச் 22) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தற்போது வரை பூபதி (53), வித்யா (38), முருகன் (50), தேவி, சுதர்சன், சசிகலா (35), கங்காதரன் உள்ளிட்ட 9 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படுகாயம் அடைந்த 19 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனையடுத்து வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளர் நரேந்திரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 11 நபர்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “இந்த வெடி விபத்தில் 27 பேருக்கு காயம் ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே 3 பேரும், மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும்போது 5 பேரும் என மொத்தம் 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர் (அமைச்சரின் செய்தியாளர் சந்திப்புக்கு பிறகே மேலும் ஒரு உயிரிழப்பு பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது). மேலும் மேல் சிகிச்சைக்காக 5 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் உள்ள 8 நபர்களில் 7 நபர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், ஒரு நபர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் இது போன்ற பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தற்போது இந்த வெடி விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏழு, எட்டு நபர்கள்தான் வேலை செய்ய வேண்டும். ஆனால், 27 நபர்கள் வேலை செய்துள்ளனர். அது தவறு. எனவே, அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம். இந்த வெடி விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற தவறுகள் மேலும் ஏற்படாமல் இருப்பதற்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் வலியுறுத்தி உள்ளோம். இந்த பட்டாசு ஆலை 2024ஆம் ஆண்டு வரை அனுமதி பெற்றுள்ளது. மீதமுள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளோம். அவ்வாறு ஆய்வு செய்யும்போது தவறு இருந்தால், நிச்சயமாக உரியவர்கள் மீது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.
மேலும் இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 6 பேர் பலி!