சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 250 கோடி ரூபாய் மதிப்பிலான 38 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் இன்று (அக். 12) அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்கப்பட்டது.
அப்போது செய்தியாளரைச் சந்தித்த சேகர்பாபு, " காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 132 ஏக்கர் நிலம் இதுவரை இந்து சமய அறநிலையத் துறையால் மீட்கப்பட்டுள்ளது. இன்று 250 கோடி ரூபாய் மதிப்பிலான 38 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. 78 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு முறையாக நிலம் மீட்கப்பட்டுள்ளது.
4500 புகார்கள்
பக்தர்கள் கோயில் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க குறைகள் பதிவேடு என்ற செயலி உருவாக்கினோம். இணையதளம் மூலம் குறைகளைத் தெரிவிக்க கடினமாக இருந்ததால், தொலைபேசி எண்ணை அறிவித்தோம். அதன்மூலம், இதுவரை நான்காயிரத்து 500 புகார்கள் வந்துள்ளன. மண்டல வாரியாகப் பிரித்து அனுப்பி ஆய்வு செய்துவருகிறோம், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹெச். ராஜாவின் இந்து சமய அறநிலையத் துறை மீதான பேச்சுகளை அறநிலையத் துறை கருத்தில்கொள்ளாது. சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வழிபாட்டிற்கு இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில் திறப்பு - வழக்கு நிலுவையில் உள்ளது
விஜயதசமியன்று கோயில் திறப்பது தொடர்பாக நீதிமன்றதில் வழக்கு நிலுவையில் உள்ளது, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலைத் துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
திருநீர் மலையில் ரோப் கார் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் மற்ற கோயில்களில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் நடைபெற உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெரினாவில் தொடரும் சோகம்: இறப்பைத் தடுப்பதற்குப் புதிய அவசர உதவி மையம்!