காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்தில் சிக்கினார். இதனை அடுத்து அவர் மீது காஞ்சிபுரம் பாலுச்செட்டி சத்திரம் போலீசார், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதனை அடுத்து டிடிஎஃப் வாசனை வருகிற அக்டோபர் 3ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், போலீசார் டிடிஎஃப் வாசனை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, புழல் சிறை கைதியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டிடிஎஃப் வாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் தரப்பில், அவர் கைது செய்யப்பட்ட அன்றைய தினமே ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி, மாவட்ட நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், டிடிஎஃப் வாசன் மீது ஏராளமான போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் உள்ளது என்றும், தமிழகத்தில் மட்டுமல்லாமல் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இவர் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் உள்ளதை சுட்டிக்காட்டி, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என வாதிட்டார். அதனை அடுத்து, நீதிபதி செம்மல் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜாமீன் கோரி டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவினை அதே காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன் விசாரணை இன்று (செப்.26) மாவட்ட நீதிபதி செம்மல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட டிடிஎஃப் வாசன் தரப்பு வழக்கறிஞர், டிடிஎஃப் வாசன் பிறருக்கு எவ்வித காயங்களும் ஏற்படுத்தவில்லை என்றும், தனக்கென பாதுகாப்பு உடைகள் அணிந்தே பயணித்ததாகவும், விலீங் சாகசம் நிகழ்த்தவில்லை என்றும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து என்றும், டிடிஎஃப் வாசன் செய்த தவறுக்கு அவருக்கு நூதன தண்டனை வழங்கும்படி தனது வாதங்களை முன் வைத்தார்.
ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், டிடிஎஃப் வாசன் சாகசம் நிகழ்த்தியே வருமானம் ஈட்டி வருவதாகவும், அப்பாவி இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக திகழும் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கினால், இளைஞர்கள் இது போன்ற சாகசங்களை நிகழ்த்துவது வாடிக்கையாகிவிடும் என்றும் வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி செம்மல், "பாதுகாப்பு உடைகள் பயன்படுத்தி இருந்தாலும், பிறருக்கு பாதுகாப்பான பயணமாக இல்லையே. விபத்துக்கு உள்ளான வாகனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையா?" போன்ற கேள்விகளை எழுப்பினார். மேலும், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தின் அசல் ஆகியவற்றையெல்லாம் ஏன் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, இரண்டாவது முறையாக ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.