பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழு வயது சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கோயம்புத்தூர் செல்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமானநிலையத்தில் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில்,
"தேர்தல் நடைபெற இருக்கிற இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி என்கிற படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதை தடை செய்யக் கோரி காங்கிரஸ் மனு அளித்துள்ளது. தேர்தல் நடைபெற இருக்கின்ற நேரத்தில் இப்படத்தை வெளியிடுவது தவறு. இது விளம்பரமாகத்தான் கருத முடியும்.
வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பவர்கள் அன்பினால் எடுக்கிறார்கள். இதன் மூலம் பணம் பட்டுவாடா செய்வது குற்றம்தான். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு அரசு அழுத்தமானதாகவும், காவலர்களுக்கு சுதந்திரமான நல்ல விஷயங்களையும் கொடுக்க வேண்டும்.
நல்ல திட்டங்கள் நிறைய இருந்தது. ஆனால் அதெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. உழவர் சந்தை என்ற ஒன்று இருந்தது இப்போது இல்லை. இது போன்ற நல்ல திட்டங்களை கண்டெடுத்து மக்களுக்காக செயல்படுத்துவோம்" என்றார்.