சென்னை விமான நிலையத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், சென்னை ஐஐடி மாணவி தற்கொலை குறித்து கேட்டபோது, ”நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின், பிரிவினைகளின் பிரதிபலிப்பு அனைத்து இடங்களிலும் இருக்கும்.
இதற்கும், அங்கு நடக்கும் தற்கொலைகளையும் சம்பந்தப்படுத்த வேண்டாம். பிரிவினை என்பது நாடு எங்கும் நடக்கும் அவலம். அதன் பிரதிபலிப்பாகவும் இது இருக்கக்கூடும்” எனக் கூறினார்.
பட வாய்ப்புகள் குறைந்ததால்தான் கமல் ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் ஊராட்சிக்கும் நகராட்சிக்கும் அவருக்கு வித்தியாசம் தெரியாது எனவும் முதலமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு, ”முதலமைச்சர், அவரின் விருப்பங்களை தெரிவிக்கிறார். ஊராட்சிக்கும், மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்கு தெரியாது என்பது அவர்கள் கருத்து” என்றார்.
மேலும் பேசுகையில், ”தமிழ்நாட்டு அரசியிலில் வெற்றிடம் இருக்கிறது என்ற நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதைத் தவிர வேறு வழி இல்லை. நல்ல தலைமைக்கு ஆளில்லை என்பதுதான் வெற்றிடம். நல்ல தலைமை இருந்தார்கள் என்பதை மறுக்கமுடியாது.
இல்லை என்று சொல்வதற்காக வருத்தப்பட்டு பயனில்லை. நல்லவர்கள், வல்லமையர்கள் தலைமை ஏற்றாலும் பிசகுகள் நடக்காமல் இருக்காது. அதற்கும் விமர்சனங்கள் வந்தே தீரும். அதை ஏற்றுக்கொள்ளும் பண்பு, பழைய தலைவர்களுக்கு இருந்தது, நவீன தலைவர்களுக்கும் இருக்கவேண்டும். இதுவே, ஜனநாயகத்தின் பங்காளியாக என்னுடைய கருத்து” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘ஸ்டாலின் நாக்கில் சனி’ - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு