சென்னை: சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா அறக்கட்டையின் ருக்மணி தேவி கலை கல்லூரியில், பேராசிரியர் உள்ளிட்ட சிலர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த வாரம், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் படித்த கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் உதவி பேராசிரியர் ஒருவர் மீது புகார் அளித்தார். கடந்த 2019ஆம் ஆண்டு, கல்லூரியில் நடன உதவி பேராசிரியராக இருந்து வந்த ஹரி பத்மன் பல்வேறு வகையில் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் அளித்திருக்கிறார்.
தவறான நோக்கத்துடன் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தன்னை அவருடைய அறைக்கு அழைத்ததாகவும், பல்வேறு விதங்களில் அவர் தனக்கு அளித்த தொந்தரவின் காரணமாக தன்னுடைய படிப்பைத் தொடர முடியாமல் பாதியிலேயே விட்டுச் சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த புகாரைப் பெற்ற அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் உதவி பேராசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களின் மாண்பை சீர்குலைக்கும் வலையில் செயல்படுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், புகார் அளித்த மாணவி உடன் படித்த முன்னாள் மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்காக தனிப்படை போலீசார் கேரளா சென்றுள்ளனர். மேலும், அந்த காலகட்டத்தில் கலாஷேத்ராவில் பணிபுரிந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடமும் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, மாணவியின் குற்றச்சாட்டு குறித்து விவரங்களைப் பெற்று வருகின்றனர். அதேபோல் 2019ஆம் ஆண்டு பணியாற்றிய துணை இயக்குநர் மற்றும் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
புகாருக்குள்ளான பேராசிரியர், கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்துக்குச் சென்று இருக்கிறார். அவரை கைது செய்வது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கலாஷேத்திரா பாலியல் புகார் விவகாரம்: கல்லூரி இயக்குநர் ஆஜராக மகளிர் ஆணையம் உத்தரவு