சென்னை: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கலைக் கல்லூரியில் பணிபுரியும், ஒரு பேராசிரியர் மற்றும் மூன்று நடன உதவியாளர்கள் கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டு வருவதாக, பல முறை புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் புகாருக்கு ஆளான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரியில் தொடர்ச்சியாக இதுபோன்று, அந்த நான்கு பேர் பாலியில் துன்புறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர் என நான்கு மாதங்களாகத் தெரிவித்து வருவதாகவும், ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இந்த நிலையில், நீலாங்கரை உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில், மாணவர்களுடனும் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி 6-ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும் ,இரண்டு நாட்களில் விடுதியிலிருந்து மாணவிகள் வெளியேற வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
பின்னர், மாணவிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின் நாளை முதல் கல்லூரி மூடப்படும் என்றும், 12-ஆம் தேதி வரை மாணவர்கள் விடுதியில் தங்கிக் கொள்ளலாம் என்றும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. மாணவிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்து இருந்தாலும், எழுத்துப் பூர்வமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்ததாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கல்லூரிக்கு நேரில் வந்து, இது தொடர்பாக விசாரணை மற்றும் வருவாய்க் கோட்டாட்சியர் உடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், அறிக்கையை அரசுக்கு அளிக்க உள்ளதாகவும் பதிவிற்குப் பின்னர் தெளிவாகத் தெரிவிப்பதாகவும் கூறிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: India Coronavirus Cases: கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.. எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு அதிகம் தெரியுமா?