சென்னை: தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து ஏ.டி.எம் கார்டுகளை வழங்கினார்.
மேலும், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்ததும் செப்டம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை, தகுதி வாய்ந்த 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 என அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தபட்டது. ஒரு சிலருக்கு வங்கிக் கணக்கு நிலவிய சிக்கல் காரணமாக முதல் நாளில் பணம் செலுத்தப்படாத நிலையில், மணி ஆர்டர் மூலமும் பணம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: காவிரி விவகாரம்: கர்நாடகாவை கண்டித்து கடை அடைப்பு..! திமுக விவசாய சங்கம் அறிவிப்பு!
அதனைத் தொடர்ந்து, தகுதி நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பலருக்கும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என பல இடங்களில் பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நிராகரிக்கபட்டவர்கள் மற்றும் விண்ணப்பங்கள் தவறியவர்கள், உரிமைத்தொகை பெற தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்காலம் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் ஏராளமானோர் மீண்டும் விண்ணப்பத்தினர்.
மேலும், கலைஞர் உரிமைத் தொகை அனைத்து மாதங்களும் 15ஆம் தேதி பயணாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரு நாள் முன்பாக, அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது சரிபார்க்கபட்டு வருவதாகவும், அதில் எத்தனை குடும்பத் தலைவிகள், கலைஞர் உரிமைத் தொகை பெற தகுதி வாய்ந்தவர்கள் என பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு! பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே தீவிரமாகும் போர்!