சென்னை : ஒருவரின் அந்தரங்கத்தை வெளியிட்டால் வெளியிட்டவரைத்தான் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் கருத்தை வரவேற்பதாக தமிழக பாஜகவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால்கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜ், “சமீபத்தில் வெளிவந்த பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவர்களில் ஒருவரான கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய காணொலி குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் மகளிரணித் தலைவர் மலர்க்கொடியின் தலைமையில் அது நடைபெற்று வருகிறது” என்றார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை, கே.டி. ராகவன் விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் பேச்சுக்கள் தொடர்பான ஆடியோக்கள் குறித்து கேட்டபோது, “அண்ணாமலை ஒரு பொறுப்பான தலைவராக பதிலளித்துள்ளார்” எனக் கூறினார்.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய வீடியோ மார்பிங் என்று சொல்லும் போது அதற்காக ஏன் முறையாக புகார் அளிக்கவில்லை என்ற கேள்விக்கு, “குறிப்பிட்ட அந்த வீடியோவில் இடம் பெற்றிருப்பது குறித்து கட்சிக்குள் விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே புகார் கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை முழுமையாக மார்ப்பிங் செய்ய முடியுமா என்று கேட்கையில், “ஒரு காணொலியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நபரை, பொருளை மார்ப்பிங் செய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். மேலும், “ஒருவரின் அந்தரங்கத்தை வெளியிட்டால் வெளியிட்டவரைத்தான் சிறைக்கு அனுப்ப வேண்டும்” என்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் கருத்தை வரவேற்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க : இந்து சமய அறநிலையத்துறையை, “தமிழர் சமய அறநிலையத்துறை” என பெயர் மாற்ற சீமான் கோரிக்கை