சென்னை: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் (Minister V.Senthil Balaji) உறவினர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. இதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களின் விவரங்களை முழுமையாக வருவான வரித்துறை வெளியிடவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin Visit to Japan) வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நிலையில் திடீர் ஐ.டி ரெய்டு (IT Raid) நடந்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
குளறுபடியில் எதிர்க்கட்சி; நேரத்தை சாதகமாக்கிய அண்ணாமலை: திமுக அரசின் அமைச்சரவையில் மிகவும் அதிகாரமிக்க அமைச்சராக கருதப்படுபவர், அமைச்சர் செந்தில் பாலாஜி. திமுகவின் இணைந்த சில ஆண்டுகளில் மு.க.ஸ்டாலினுக்கு, செந்தில் பாலாஜி நெருக்கமாக மாறினார். இதனை அறிந்த எதிர்க்கட்சிகள் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், செந்தில் பாலாஜியை குறிவைக்க ஆரம்பித்தனர். அதிமுகவில் உட்கட்சி பிரச்னை காரணமாக திமுக மற்றும் திமுகவின் அமைச்சர்கள் மீது போதிய குற்றச்சாட்டை அக்கட்சி வைக்க முடியாத சூழல் இருந்தது. ஆனால், அந்த இடத்தை நிரப்புவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சி செய்தார்.
கொங்கு பகுதியில் பாஜகவின் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்பவர்?: குறிப்பாக, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மண்டலத்தை திமுக கைப்பற்றியது. சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த திமுக, உள்ளாட்சி தேர்தலில் எப்படி வெற்றிபெற்றது எனக் கேள்வி எழுப்பட்டது. இதற்கு முழுமையான காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் என்று பேசப்பட்டது. கோவை மண்டலத்தில் பாஜக கனிசமாக வளர்ந்து வருகிறது. மேலும், வளர்வதற்கு செந்தில் பாலாஜி தடையாக இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருதினார். அண்ணாமலைக்கும் கொங்கு பகுதி செல்வாக்குமிக்க பகுதியாக இருக்கிறது.
ஈரோடு இடைத்தேர்தல்; செந்தில் பாலாஜியின் வியூகமும் திமுகவின் வெற்றியும்: இதனால், நிலக்கரி கொள்முதல் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது, டாஸ்மாக் கடைகளில் அதிக முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை வைக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜியை 'சாராய அமைச்சர்' என காட்டமாக அண்ணாமலை விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். கொங்கு பகுதியில் செந்தில் பாலாஜியின் வளர்ச்சியை அண்ணாமலையும் விரும்பவில்லை, எடப்பாடி பழனிசாமியும் விரும்பவில்லை. சமீபத்தில் நடைபெற்ற, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கு காரணம், செந்தில் பாலாஜியின் வியூகம் மற்றும் செயல்பாடுகள் எனக் கூறப்பட்டன.
'ரெய்டு வரும்' என எச்சரித்த அண்ணாமலை: செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய ஐ.டி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் (Enforcement Department) விரைவில் வருவார்கள் என அண்ணாமலை கூறிக்கொண்டே வந்தார். இந்த நிலையில், சமீப காலமாக கள்ளச்சாராய மரணங்கள்(Illicit Liquor Deaths TN), டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகம் வசூல் செய்தல், டாஸ்மாக் கடைகளில் மாதம் மாதம் ஒரு தொகை வசூல் என அடுக்கடுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்டது. இதனை, பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் கூறினர்.
கொங்கு மண்டலத்தை குறிவைத்த டெல்லி 'பாஜக': வருமான வரித்துறை சோதனைக்கும் அண்ணாமலைக்கும் தொடர்பு இருக்கிறதா? என பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் இதுகுறித்து கேட்ட போது, 'வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் () தமிழ்நாட்டில் பாஜக கனிசமான இடங்களில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். குறிப்பாக, கொங்கு மண்டலத்தை கைப்பற்ற பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி பாஜக எடுத்து வருகிறது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தடையாக இருப்பார். அதனால், அவரை முடக்குவதற்கு அண்ணாமலை சில வியூகம் அமைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் அண்ணாமலையை வியப்படையச் செய்தது.
ரெய்டுக்கு முறைகேடுகளும் கள்ளச்சாராய மரணங்களும் காரணமா?: இந்த செயல்பாடுகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக இருந்தால், பாஜக வெற்றி பெறுவது கடினம். இதனால், சமயத்திற்கு காத்திருந்த அண்ணாமலை, கள்ளச்சாராய மரணம் மற்றும் டாஸ்மாக் கடைகளில் முறைகேடு போன்றவற்றை மத்திய அரசுக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைத்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பல்வேறு ஆவணங்களையும் மத்திய அரசுக்கு அண்ணாமலை அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், பல துறைகளில் உள்ள அமைச்சர்கள் மீதும் முறைகேடுகள் புகாரை அண்ணாமலை கொடுத்துள்ளார். அடுத்தடுத்து மேலும் பல அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டை பார்க்கலாம்' என அவர் கூறியுள்ளார்.
நெருங்கும் தேர்தல்; ரெய்டுக்கு அண்ணாமலை மட்டும் காரணமா?: இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, 'தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற ஐ.டி. ரெய்டுகள் செய்வதை பாஜக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. முறைகேடுகள் நடைபெற்றதோ? இல்லையோ? ஆனால், முக்கிய நபர்களின் செல்வாக்கை குறைக்கும் விதமாக இது போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனைகளுக்கு ஒரு வகையில் அண்ணாமலை காரணமாக இருக்கலாம். ஆனால், அவர்தான் அனைத்தையும் செய்தார்? என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி பார்த்தால், எடப்பாடி பழனிசாமியும்தான் பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளித்தார்.
மு.க.ஸ்டாலின் இருந்தாலும் ரெய்டு நடந்திருக்கலாம்: இருக்கின்ற அமைச்சர்களில் தேர்தலில் அதிக பங்களிப்பை செந்தில் பாலாஜி கொடுப்பார் என தெரிந்த பாஜக, அவரை முடக்க நினைக்கிறது. ஆனால், செந்தில் பாலாஜி எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை எனக் கூறவில்லை. ஒரு சில டாஸ்மாக் கடைகளில் வெளிப்படையாகவே வசூல் செய்வது, அராஜகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் நாம் பார்க்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு இருந்திருந்தாலும் சோதனை நடைபெற்றிருக்கும். அடுத்ததாக அமலாக்கத்துறை, சிபிஐ (CBI) போன்றவற்றையும் பாஜக அரசு பயன்படுத்தும்” என கூறினார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடக்குமா?: இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவாகவே உள்ளது. எதிர்க்கட்சிகள் குழுப்பமான சூழ்நிலையில் இருக்கும் போது முன்கூட்டியே தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாஜகவின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் தடையாக இருப்பவர்கள் மீது இது போன்ற சோதனைகள் நடத்த அதிக வாய்ப்புள்ளது. இது அரசியல் ரீதியாக அண்ணாமலைக்கோ, பாஜகவிற்கோ அவர்கள் நினைத்தது போன்று பலன் தருமா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "திமுகவின் திட்டமிட்ட தாக்குதல்" ஆதாரம் இருப்பதாகக் கூறும் வருமான வரித்துறை